×

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள்: திருவாரூரில் ரூ 2 கோடியில் அறிவுசார் மையம் திறப்பு

திருவாரூர், மே 1: திருவாரூரில் ரூ 2 கோடி மதிப்பில் திறக்கப்பட்டுள்ள அறிவுசார் மையம் மூலம் அரசின் போட்டி தேர்வுகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதால் அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 2021- 22ம் நிதியாண்டில் மட்டும் ரூ 2 ஆயிரம் கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதன்பின்னரும் தொடர்ந்து 2 ஆண்டு காலமாக ரூ பல ஆயிரக்கணக்கான கோடியில் மாநிலம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் நகரில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் ஐ.பி கோயில் தெரு, வாசன் நகர் மற்றும் பிடாரி கோயில் தெரு என 3 இடங்களில் 3 குளங்கள் ரூ 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பனகல் சாலையில் நகராட்சியின் சோமசுந்தரம் பூங்கா கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 41 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தங்களது அறிவு திறனை வளர்த்துகொள்ளும் வகையிலும், வாசிப்பு திறனை அதிகரிக்கவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 100 அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் ஒன்றாக திருவாரூர் தெற்கு வீதியில் ரூ ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுசார் மையத்தினை கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் மற்றும் அறிவு சார் மையம் 4 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் வரவேற்பு அறை, கலந்தாய்வு கூடம், படிப்பகம் மற்றும் குழந்தைகள் படிப்பகம், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஜெனரேட்டர் வசதி மற்றும் கழிப்பிட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா, ஸ்மார்ட் கிளாஸ், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி இடங்களில் நூலக வசதி, குரூப் 1 முதல் குரூப் 4 வரையில் அரசின் போட்டி தேர்வுகளுக்கு உரிய புத்தகங்கள், காவலர் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர் தகுதி தேர்விற்குரிய புத்தகங்கள் என விலை உயர்ந்த 2 ஆயிரத்து 400க்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் மற்றும் திறனறிவு தேர்விற்குரிய புத்தகங்கள் மற்றும் இதர நூலக புத்தகங்கள் போன்றவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த அறிவுசார் மையத்திற்கு தினந்தோறும் நூற்றுகணக்கான மாணவ, மாணவிகள் வந்துசெல்லும் நிலையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் அரசு விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிறு தவிர பிற தினங்கள் அனைத்தும் இயங்கி வருகிறது.

இதுகுறித்து அறிவுசார் மையத்தின் அலுவலரான முனைவர் இருளப்பன் கூறுகையில், ஒரு நூலகம் திறக்கப்பட்டால் 100 சிறைசாலைகள் மூடப்படும் என சுவாமி விவேகானந்தர் கூறியதற்கிணங்க மாநிலம் முழுவதும் 100 அறிவுசார் மையங்கள் முதல்வர் மூலம் திறக்கப்பட்டுள்ளது மாணவர்களின் வருங்கால சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக அமையும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நூலகத்திற்கு வந்துசெல்லும் மாணவ, மாணவிகள் கூறுகையில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் உபகரணங்கள் வழங்குவது, கல்வி உதவி தொகை வழங்குவது என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த அறிவுசார் மையம் மூலமும் மாணவர்கள் தங்களது வாசிப்பு திறனை அதிகரிக்கவும், போட்டி தேர்வுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதால் இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

The post போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள்: திருவாரூரில் ரூ 2 கோடியில் அறிவுசார் மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED திருவாரூரில் காற்றுடன் கனமழை..!!